Powered By Blogger

Saturday 9 April 2016

சைட் சூபர்வசர்கள்
களப்பணியிலும், சரக்கிருப்பிலும் தூள் கிளப்புவது எப்படி?




    சிவில் சூபர்வைசர் தாம் ஈடுபட்டுள்ள கட்டடப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் தரமுள்ளவையாக இருக்கும் விதத்தில் தேர்வு செய்வதில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
குறித்து வைக்க மறக்காதீர்கள் :
சிவில் சூபர்வைசர் ஒருவர் தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் குறிப்பாக எழுதி வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கலாம். சில நேரம் வீடு கட்டுவீர்கள். வேறு சில நேரங்களில் கல்வி நிலையங்கள் கட்டிக் கொண்டிருப்பீர்கள். பிற நேரங்களில் தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பீர்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வேறுபடக் கூடியவை. ஆனால் இவற்றிற்கான உங்களுடைய குறிப்புகள் ஒரே விதத்தில் அமையலாம்.
   இன்றைக்கு நானூறு மூடை சிமென்ட் வந்து இறங்கியது என்பது ஒரு சிறு குறிப்பு. இதையே நீங்கள் இன்னும் விரிவாக எழுதி வைக்கலாம்.
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்
சிமென்டின் தரம் ( கிரேட்)
உற்பத்தி இடம்
விநியோகிப்பாளரின் கிடங்கு
இடையிலுள்ள தூரம்
வந்து சேர்வதற்கான நேரம்
போக்குவரத்து, ஏற்று , இறக்குக் கூலி
அதற்குத் தேவைப்பட்ட நேரம்
ஆட்களின் எண்ணிக்கை
இருப்பு வைக்கப்படும் இடம்
அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
என்றைக்கு எத்தனை மூடைகள் வெளியில் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான திட்டம்
இருப்பிற்குப் பொறுப்பேற்பவர்
கிடங்கிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவு
சான்றுச் சீட்டு
வெளியில் அனுப்பி வைக்கப்பட்ட மூடைகளின் எண்ணிக்கை
பயன்படுத்தப்பட்ட அளவு
வேலை இடத்தில் மீதம் நிற்பது
(அல்லது) பயன்படுத்தியது போக மீதி திரும்பி வந்தது
எந்த நேரத்திலுமான இருப்பின் விவரம்
அடுத்து எப்போது தேவைப்படும்?
குறைந்தபட்ச இருப்பு
அடுத்த நடை வந்து சேர்வதற்கான இடைவெளி
    இவற்றை முறையாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டால் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளாமல் உங்கள் இயக்கங்கள் மேம்படும்.
    நீங்கள் சிவில் சூபர்வைசர் என்ற விதத்தில் எத்தனையோ பேர்களுடன் உரையாட வேண்டி இருக்கும். விற்பனையாளர்கள். உற்பத்தியாளர்கள். விநியோகிப்பாளர்கள். ஆய்வாளர்கள். ஒப்பந்தக்காரர்கள். துணை ஒப்பந்தக்காரர்கள். உரிமையாளர்கள். பொறியாளர்கள். வல்லுநர்கள். தொழிலாளர்கள்.
    இப்போது ஒரு கடைக்காரரிடம் பேசிவிட்டு வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் குறிப்புகளை எழுத ஆரம்பியுங்கள்.
சந்தித்த நபர்
எந்த வகையைச் சேர்ந்தவர்
நாள்
நேரம்
இடம்
நிறுவனம்
சந்திப்பிற்கான தேவை
சந்திப்பின் பலன் / விளைவு
குறைந்தபட்சம் இந்த விவரங்களையாவது உங்கள் குறிப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதெல்லாம் எதற்கு? எல்லாம் என் ஞாபகத்திலேயே இருக்கும் என்று சொல்லாதீர்கள்.
குறைகளையும் பதியுங்கள்
நீங்கள் உங்களது குறிப்புகளில் நல்ல விஷயங்களை மட்டுமேதான் பதிவு செய்து வைக்கவேண்டும் என்பது இல்லை. கெட்ட விஷயங்களும் இருக்கலாம். கெட்டவை என்றால்
எப்படி ?
    நீங்கள் ஒரு ஒப்பந்தக்காரரைக் காச்சு மூச்சென்று கத்தித் திட்டி இருக்கலாம். அதற்குக் காரணம்? அவர் மூன்று நாட்களில் முடித்திருக்க வேண்டிய வேலையை நான்கு நாட்களுக்கு இழுத்திருப்பார்.வினியோகிப்பாளர் ஒருவர் அனுப்பி வைத்த வேதிப் பொருட்கள் நீங்கள் கேட்டுக் கொண்ட நிறுவனத் தயாரிப்பாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
    கட்டடத் தேவைக்கான சரக்குகள் வந்து இறங்குகின்றன.
அனுப்பி வைக்கப்பட்ட அதே அளவு, எண்ணிக்கையில் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறதா? சரி பாருங்கள். பதிவு செய்யுங்கள்.
திட்டங்கள், வரைபடங்கள், அனுமதிகள், ஆய்வுகள் போன்றவற்றையும் அது அதற்கு உரிய ஒழுங்கில் பராமரியுங்கள். இந்த ஒழுங்கில் மாற்றம் இருந்தால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
    காசை விடக் கணக்கு முக்கியம். ஒரு சிவில் சூபர்வைசர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய விக்ஷஷயங்கள் பல இருக்கும். எந்த நேரத்தில் எதை வாங்கினோம்,எதை யாருக்குக் கொடுத்தோம் என்பது மாதிரியான விவரங்கள் அடங்கிய குறிப்புச் சீட்டுக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை டெலிவரி ஸ்லிப்கள், சலான்கள், ரிசிப்ட்கள் என்று குறிப்பிடுவார்கள்.சே.. என்ன ஒரு தலைவலி இது? எத்தனையைத்தான் பத்திரப்படுத்தி வைப்பது என்று எரிச்சலடையாதீர்கள். சின்னதாய் ஒரே ஒரு துண்டுச் சீட்டைத் தொலைத்துவிட்டாலும் அவதிப்படப் போவதென்னவோ
நீங்கள்தான்.
கண்காணிப்பு அறிக்கைகள்
    செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் எந்த அளவுக்குச் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கும். இன்று மாலை வரை இன்னின்ன வேலைகள் இந்த அளவு முடிந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கு வைத்திருப்பீர்கள். நீங்கள் திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா? பார்க்க வேண்டும். இந்த விவரங்களைப் பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்கிற மாதிரி வரைபடங்களாகவும் வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது. இதிலும் கம்ப்யூட்டர் பதிவுகளாக இருந்தால் மேலும் எளிது.
கள அலுவலகம்
    நீங்கள் வேலை செய்யும் இடத்திலேயே உங்களுக்கென்று ஒர் அலுவலகத்தை அமைத்துக் கொள்ள முடிந்தால் பேருதவியாக இருக்கும். பெரிய இடப்பரப்புத் தேவையில்லை. ஒரு நூறு சதுர அடிக்குள் இருந்தாலே போதும்.உங்களது ஆவணங்கள் , கோப்புகள் முதலியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். அவற்றை வெயில், மழை , பூச்சிகள்,திருடர்கள் போன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பத்திரமானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
   நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகள் நூற்றுக் கணக்கிலானவை. ஒவ்வொன்றையும் வரிசைப்படி ஒவ்வொன்றாகச் செய்வதா?ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொள்வதா? தீர்மானிக்க வேண்டும். 1,2,3 என்கிற வரிசைப்படிதான் போக வேண்டும் என்பது மாதிரியான வேலைகள் சில இருக்கலாம். 17,4.36 என்று வசதிப்பட்ட வரிசையில் முடிக்கக் கூடிய வேலைகளும் இருக்கலாம்.
முன்பெல்லாம் சுவரை வைத்துவிட்டு அதன்மேல் தளத்தை உட்கார வைப்பார்கள். இப்போது? தளத்தை உருவாக்கிவிட்டுச் சுவர்களை எழுப்பி அடைக்கிறார்கள். வரிசை முறை மாறுகிறது. வசதிகள் பெருகுகிறது.நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமானால் எந்த வரிசையில் போனாலும் பாதிப்பில்லை என்பது மாதிரியான ஒரு வரிசை முறையைப் பின்பற்ற வேண்டும். இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
    ஜல்லியையும் மணலையும் சிமென்டையும் தண்ணீரையும் தயாராக வைத்துக் கொண்டுதான் தளம் போடும் வேலையைத் துவக்க வேண்டும். முதலில் நீராற்றும் வேலையைத் தொடங்குகிறேன். அப்புறமாய்த் தளம் போடுகிறேன் என்று போக முடியுமா?இயந்திரங்கள் வந்து காத்துக் கிடக்கும். பொருட்கள் வந்து சேர்ந்திருக்காது. இரண்டும் தயாராக இருக்கும். ஆட்கள் வந்திருக்க மாட்டார்கள்.இப்படி ஓரிடத்தில் நடக்கும்.
   இன்னொரு இடத்தில்? இதுவே தலைகீழாக இருக்கும்.முதலில் ஆட்கள் வந்துவிடுவார்கள். அவர்கள் வேலையை ஆரம்பிப்பதற்கு ஒன்றும் இருக்காது. தாதமாக இயந்திரங்கள் வந்து சேரும். கட்டுமானப் பொருட்கள் இன்னும் கிடங்கை விட்டே கிளம்பி இருக்க மாட்டா.காத்திருப்பு.
   தேவையில்லாத காத்திருப்பு.ஆட்கள் என்றால் அவர்களைச் சும்மா உட்கார்த்தி வைத்துக் கொண்டு கூலி கொடுத்தாக வேண்டும். இயந்திரங்கள் என்றால் பயன்படுத்தாமலேயே வாடகை கொடுக்க நேரும். ஏன் இப்படி?ஒருங்கிணைப்பு சரி
யில்லாததுதான் காரணம் . அதற்கு யாரைக் குறை சொல்வார்கள்? வேறு யாரை? உங்களைத்தான் . சிவில் சூபர்வைசராகிய உங்களுக்குத்தான் எல்லாப் பக்கங்களில் இருந்தும் இடி கிடைக்கும். சமாளிக்க வேண்டும்.
பொருட்களைக் கையாளும் விதம்
     கட்டுமான வேலைகளுக்கான பொருட்கள் வந்து கொண்டே இருக்கும். மறுபக்கம் நீங்கள் அவற்றைக் கட்டட வேலைகளுக்காக எடுத்துக் கொடுக்க வேண்டி வரும். எவ்வளவு வருகிறது , எவ்வளவு போகிறது என்பதை எல்லாம் நீங்கள்தான் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பைச் சரிகட்ட வேண்டும்.கட்டுமானத்திற்கானாலும் வேறு எந்தத் தேவைக்கானாலும் கிடங்கிற்கு வந்து சேரும் பொருட்களை எப்போது வெளியில் எடுப்பது என்பதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றித்தான் வைப்பதும் எடுப்பதும் நடக்க வேண்டும்.
முதலில் வருவது முதலில் வெளியில்
முதலில் வருவது இறுதியில் வெளியில்
இறுதியில் வருவது முதலில்
இறுதியில் வருவது இறுதியில்
இந்த நான்கு வழிகளில் நீங்கள் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் பொருட்களைக் கையாள வேண்டும்.
இவற்றை முறையே
FIRST IN FIRST OUT (FIFO)
FIRST IN LAST OUT(FILO)
LAST IN FIRST OUT(LIFO)
LAST IN LAST OUT(LILO)
என்று குறிப்பிடுவார்கள். பொருட்களின் தன்மை, ஆயுட்காலம். இருப்பு வைக்கும் நிலை, பயன்படுத்துதலுக்கான தேவை ஆகியவற்றைப் பொருத்து நீங்கள் எந்த வகையைப் பின்பற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
     ஒவ்வொரு முறையிலும் சாதக, பாதக அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் உங்கள்தொழிலுக்கேற்ற வழிமுறையைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்ற வேண்டும். எதை இருப்பு வைக்கலாம், எதை உடனடியாக வெளியில் அனுப்பலாம் என்பது உங்கள் முடிவின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலையாகும்.இருப்பு எப்போது தீரும், மறுபடியும் எப்போது கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும் என்பதும் இதைப் பொருத்தே அமையும். சில நேரங்களில் கட்டாயமாக இருப்பு வைத்தே ஆகவேண்டிய தேவை ஏற்படும்.
     சில நேரங்களில் இருப்பில் இருப்பதை முதலில் தீர்த்துவிட்டுப் பிறகு வாங்க வேண்டி வரலாம்.வாங்குகிற பொருட்களை இருப்பு வைக்க வேண்டியது முக்கியத் தேவை. அவ்வாறு இருப்பு வைக்கப் பாதுகாப்பான கிடங்கு வசதி வேண்டும். இருப்பு வைத்துப் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக இருக்க வேண்டும்.இருப்பில் இருக்கும்போது கெட்டுவிடக் கூடாது. நீண்ட காலம் வைத்திருந்தாலும் பயன்படுத்த ஏற்ற நிலையில் இருக்கும் பொருட்களைத்தான் இருப்பு வைக்க வேண்டும். சிமென்டை வாங்கி மாதக் கணக்கில் வைத்திருக்க முடியாது.
கூடவும் கூடாது.
     கம்பி என்றால் எத்தனை மாதங்கள் என்றாலும் வைத்திருக்கலாம். தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிமென்டுக்கும் அதே கவனம் தேவைப்படும். ஆனால் நேரடியாகத் தண்ணீர் படாவிட்டாலும் காற்றின் ஈரப்பதமே பாதிப்பை ஏற்படுத்தலாம்.அடுக்கி வைப்பதால் ஏற்படும் இறுக்கம் சிமென்டைக் கட்டிதட்டிப்போக வைக்கலாம். சில தயாரிப்புப் பொருட்களை இருப்பு வைக்கும் காலம் அதிகமாக இருக்கும்படி வைத்திருந்தால் அவற்றிற்கான உத்தரவாதம் காலாவதியாகிவிடலாம்.இப்படிப்பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment