Powered By Blogger

Saturday 9 April 2016

                

கான்கிரீட் கூரை; கவனம் வேண்டும்


                     

   வீடு கட்டும் பணிகளில் சென்ட்ரிங் முக்கியமானது. இந்தப் பணி முன்பெல்லாம் திருவிழாபோல நடக்கும். இந்தப் பணி நடக்கும் நாளில் பணியாளர்கள் அதிகம்பேர் வருவார்கள். வேலை துரிதமாக நடக்கும். சப்பாடு, டீ, கொறிப்பதற்குத் தின்பண்டம் எல்லாம் வேலையாட்களைத் தேடி வரும். இந்த வேலை முடிவடைந்தால் வீடு கட்டுவதில் முக்கால்வாசி தாண்டிவிட்டதாகச் சொல்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியில்தான் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
   கான்கிரீட் இடுவதற்கு முன், அந்தப் பகுதியை முழுமையாகச் சோதிக்க வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், வீணாவதைத் தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
சென்ட்ரிங் பாரத்தைத் தாங்கும் முட்டுக் கம்புகள் சரியான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் இணைப்புகள் வலுவாக இருப்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
   கான்கிரீட் போடுவதற்கு முன்பாக முக்கியமானது கம்பி கட்டும் பணி. கம்பி கட்டும்போது தரமான, தேவையான அளவு தடிமன் உள்ள கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இப்போது ரெடிமேட் கம்பிகள் சந்தையில் கிடைக்கின்றன. நம் தேவையைச் சொன்னால் தொழிற்சாலையில் நமக்குத் தேவையான அளவுடன் கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள். இதனால் கம்பிகள் வீணாவது குறையும். வேலையும் சுலபமாக நடக்கும். தேவையைப் பொறுத்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கம்பி கட்டிய பிறகு மேலே நடப்பது நல்லதல்ல. அதனால் கம்பி கட்டு அளவை விட்டு விலகித் தாழ்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. கம்பி கட்டும்போது மின்சார ஒயர்கள் கொண்டு செல்ல வசதியாக பிளாஸ்டிக் பைப்புகள் பதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் மின் விசிறிகள், ஊஞ்சல், தொட்டில்கள் ஆகியவை பொருத்துவதற்காக ஊக்குகள் தேவையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
   இப்பணியில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கான்கிரீட் கலவை. அது தரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதித்து அறிய வேண்டியது அவசியம். சிமென்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகிய நான்கும் சரியான அளவில் கலக்கப்படுகின்றதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். கான்கிரீட் போட்ட பிறகு தளத்தின் மேற்பரப்பு வழவழப்பாக இருக்கக் கூடாது. காரணம் இதனால் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதைத் தடுக்க துடைப்பம் கொண்டு தேய்த்துவிட வேண்டும். அதுபோல கான்கிரீட் கலவை சமமின்றி மேடாகவும் பள்ளமாகவும் இருக்கும். இதைச் சரிசெய்ய மட்டப்பலகை வைத்துத் தளத்தைச் சமப்படுத்த வேண்டும்.
   அதுபோல கான்கிரீட்டில் கட்டிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கலவையைச் சீராக இட முடியும். வெடிப்புகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். சிறிய குறைபாடுகளைக் கூட கவனமாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும். கான்கிரீட்டுக்குள் காற்று, வெற்றிடங்களை உருவாக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment