Powered By Blogger

Saturday 9 April 2016

சைட் சூபர்வைசருக்கு என்ன தகுதிகள் வேண்டும்?
__________________________________________________



       எந்த வகையான கட்டுமானப் பணிகளுக்கு சிவில் சூபர்வைசர் தேவைப்படுகிறார் என்பதை வைத்து அவரது கல்வித் தகுதி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
         சின்னச் சின்ன வேலைகளை மேற்பார்வையிடுவதற்கு அனுபவ அறிவே போதுமானது.சில இடங்களில் நடந்த கட்டுமான வேலைகளுக்கு மேஸ்திரியைக் காட்டிலும் சற்றே உயர்நிலையில் படித்தவர்கள் போதுமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக ஐ.டி.ஐ தரத்திலான படிப்புப் படித்தவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.அடுத்த கட்டத்தில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்தவர்கள் பொருந்துவார்கள்.
        அதற்கும் மேலான தகுதி என்றால் பொறியியல் பட்டதாரிகள் விரும்பப்படுவார்கள். பொறியியலில் பட்டம் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கு மேலும் பட்ட மேற்படிப்பு, நிர்வாக இயல், நிதி இயல் என்றெல்லாம் படித்தவர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட முன்வருகிறார்கள்.
        கூடவே கம்ப்யூட்டர் அடிப்படையிலான கல்வித் தகுதியும் விரும்பப்படுவதாக இருக்கிறது . இப்போதெல்லாம் கம்ப்யூட்டரை வைத்துக் கணக்குப் போடத் தெரியாதவர்கள் கைநாட்டுக்களைப் போலவே மதிக்கப்படுகிறார்கள். பொறியியல் என்று வரும்போது கம்ப்யூட்டரிலேயே கட்டட வரைபடத்தையும் கணக்குகளையும் போடத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைதானே?

கூடுதல் தகுதிகள் :
       சிவில் சூபர்வைசர் வேலைக்குச் சட்டம் படித்திருப்பதும் கை கொடுக்கும். தொழிலாளர் நலச் சட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது நல்லது. தொழில் தகராறுகள் வராமல் வேலைகளை நடத்திச் செல்வதற்கு இது அவசியமான தேவையாகும்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும்.
        அவற்றைப்பின்பற்றித்தான் இயங்க வேண்டி வரும். தொழிலாளர்களை எவ்வளவு நேரம் வேலை வாங்கலாம், அதிகப்படி வேலைக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டுமா என்பதை எல்லாம் சிவில் சூபர்வைசர் அறிந்து வைத்திருக்க வேண்டும்.பணிகளின் போது விபத்து ஏதும் ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். படித்தும் தெரிந்து கொள்ளலாம். அனுபவத்திலும் நிறையக் கற்றுக் கொள்ளலாம்.விபத்து நேர்ந்துவிட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும். இதற்கான நடைமுறைகள் எல்லாம் சிவில் சூபர்வைசருக்கு அத்துபடியாகி இருக்க வேண்டும்.
      அரசு, தனியார், கூட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வேலைகளைப் பெற வேண்டும். முடித்துக் கொடுக்க வேண்டும். இதற்குரிய திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
      சிவில் சூபர்வைசர் என்பதுதான் ஆரம்ப நிலை. அதிலேயே இருந்து விடலாம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் அதற்கேற்பத் தங்களது கல்வித் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிவில் சூபர்வைசர்,
சிவில் மேனேஜர்,
ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்,
ஸ்டோர்ஸ் மேனேஜர்,
ஸ்டோர் கீப்பர்,
பர்ச்சேஸ் அசிஸ்டென்ட்,
பர்ச்சேஸ் இன்சார்ஜ்,
மெட்டீரியல்ஸ் மேனேஜர்,
காண்ட்ராக்டர்,
லையசன் ஆபிசர் போன்ற பல நிலைகளை எட்டலாம். இதே வரிசைப்படிதான் முன்னேற வேண்டும் என்பதும் இல்லை.படித்த படிப்பை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு மாதச் சம்பளம் பெறும் வேலையைப் பிடிப்போம் என்று நினைப்பவர்கள் தங்களது கல்வித் தகுதியை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள்.சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்கள் தங்களது படிப்பையும் அனுபவத்தையும் மேலும் திறமையாகப் பயன்படுத்தும் விதத்தில் முன்னேறத் திட்டமிடுவார்கள்.
     அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தங்களது உயர்விற்கு வானமே எல்லை என்று இயங்கலாம். சாதாரண நிலையில் ஆரம்பித்துப் பல படிகளைக் கடக்கலாம்.
தொழிற்கல்விப் படிப்பு,
மேல் நிலைப் பள்ளிப் படிப்பு,
பட்டயப் படிப்பு,
பட்டப் படிப்பு,
தொழில் பழகுநர் பயிற்சி,
குறுகிய காலப் படிப்பு, பயிற்சிகள்,
நிறுவனங்களில் பணியாற்றும் அனுபவம்,
சொந்தத் தொழில் அனுபவம்,
வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அனுபவம்,
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம்,
என்று பல்வேறு தகுதிகளைப் பெற்றால் ஒவ்வொரு படிநிலையையும் எளிதாகக் கடந்து செல்லலாம்.
         பகுதிநேரப் படிப்பிற்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. ஆன்லைன் பயிற்சிகளிலும் சேரலாம். அஞ்சல் வழியிலும் பயிலலாம்.சில நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களை அயல் நிறுவனங்களில் பயிற்சி எடுக்க வைப்பதும் உண்டு. எந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் முன்னுக்கு வரலாம்.

No comments:

Post a Comment